ரமழானில் நோன்பு விடுவதற்கான சலுகைகளும்

1522

ரமழானில் நோன்பு விடுவதற்கான சலுகைகளும், அதனைப் பிறிதொரு நாளில் நோற்றலும் (கழாச் செய்தல் )

ரமழானில் நோன்பு விடுவதற்கான சலுகைகள்

1. நோய்

நோயாளிக்கு நோன்பு விட அனுமதி உண்டு.

அல்லாஹ் கூறுகின்றான்: {உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும்}[அல்குர்ஆன் 2 184].

நோயின் காரணமாக நோன்பு நோற்க சிரமம், அல்லது தீங்குகள் ஏற்படும் என்றாலே நோன்பு விட அனுமதியுண்டு. சிரமமில்லாத சிறு நோய்களுக்கல்ல.

நோயாளி நோன்பு விடுதல்

குணப்படுத்த முடியுமான நோயாக இருந்து, நோன்பை விட்டால் அவர் அடுத்த ரமழானிற்கு முன்னர் அதனைக் கழாச் செய்திட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: {உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும்}[அல்குர்ஆன் 2 184]

தீராத நோயாக இருந்தால், அல்லது நோன்பு நோற்க சக்தியற்ற நிலையிலுள்ள வயோதிபராக இருந்தால் அதனைக் கழாச்செய்யத் தேவையில்லை. பதிலீடாக ஒவ்வொரு நோன்பிற்கும் ஓர் ஏழை விகிதம் அரை ஸாவு (ஒரு ஸாவு என்பது நடுத்தர ஒரு மனிதருடைய இரு கையால் நான்கு முறை அள்ளும் அளவாகும். அதனைக் கிலோ கிராமில் கணிக்கும் போது சுமார் 2.25 கி. கிராம் எடையைக் கொள்கின்றது. எனவே அரை ஸாவு என்பது சுமார் 1125 கிராம் ஆகும்.) அளவு உணவளிக்க வேணடும்.

2. பிரயாணம்

பிரயாணிக்கு ரமழானில் நோன்பை விட முடியும், பதிலாக அடுத்த ரமழானிற்கு முன்னர் அதனைக் கழாச் செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: {உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும்}[அல்குர்ஆன் 2 184]

தொழுகையை சுருக்கித் தொழ முடியுமான பிரயாணங்களில் தான் நோன்பையும் விட அனுமதியுண்டு. மார்க்கத்தில் அனுமதக்கப்பட்ட நடைமுறையில் பிரயாணம் என்று வரும் போது அதில் தான் சுருக்கித் தொழவும், நோன்பு விடவும் முடியும். அப்பிரயா ணம் பாவமாக, அல்லது நோன்பை விடு வதற்கான தந்திரோபாயமாக இருந்தால் அதில் நோன்பை விட முடியாது.

பிரயாணி நோன்பு நோற்றால் அவருடைய நோன்பு செல்லுபடியாகும். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : «நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர் விட்டவரையோ, நோன்பை விட்டவர் நோற்றவரையோ குறை கூறவில்லை»(ஆதாரம் புஹாரி).

எனினும் பிரயாணத்துடன் நோன்பு நோற்பதால் சிரமமோ, விபரீதங்களோ ஏற்பட்டால் அவர் நோன்பு விடுவதுதான் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் நோன்பு நோற்று, அதிக உஷ்னத்தால் நிழல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டார்கள். மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டிருந் தார்கள். நபியவர்கள் கூறினார்கள் : «பிரயாணத்தில் நோன்பு நோற்பது நற்செயலல்ல»(ஆதாரம் புஹாரி).

3- கர்ப்பமும், பாலூட்டுதலும்

கர்ப்பிணி, மற்றும் பாலூட்டும் தாய்மார் தமக்கோ, தமது குழந்தைகளுக்கோ பாதிப்பு ஏற்படுமென அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு பிறிதொரு நாளில் கழாச் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு நோன்பையும் (நான்கு ரக்அத்) தொழுகையில் பாதியையும், பிரயாணி, கர்ப்பிணி, பாலூட்டும் தாய் (மூவரு)க்கும் நோன்பையும் வீழ்த்தியுள்ளான்»
(ஆதாரம் திர்மிதி)

தமது குழந்தைகளுக்காக நோன்பை விட்டால் கழாச் செய்வதுடன் அரை ஸாவு அளவு (1.25 கிலோகிராம்) உணவளிக்கவும் வேண்டும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «கர்ப்பிணி, பாலூட்டும் தாய் தமது குழந்தைக்காக அஞ்சினால் நோன்பு விட்டுவிட்டு, கழாச் செய்யட்டும்» (ஆதாரம் அபூதாவுத்)

4. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம்

ரமழானில் மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் ஏற்பட்ட பெண் நோன்பு விடுவது அவசியமாகும். நோற்றாலும் செல்லுபடியாக மாட்டாது, அதனைக் கழாச் செய்ய வேண்டும். ஆஇஷா (ரலி) அவர்களிடம் மாதவிடாய்ப் பெண் தொழுகையில்லாமல் நோன்பை மாத்திரம் கழாச் செய்வது பற்றி கேட்கப் பட்ட போது «எங்களுக்கு அது ஏற்படும், அப்போது நோன்பைக் கழாச் செய்யும் படி ஏவப்படுவோம், தொழுகையைக் கழாச் செய்யும்படி ஏவப்பட மாட்டோம்” என்றார்கள்»(புஹாரி முஸ்லிம்).

பிறிதொரு நாளில் நோன்பு நோற்றல்

• தக்க காரணமின்றி ஒரு முஸ்லிம் ரமழான் நோன்பை விட்டால் அல்லாஹ்விடம் மீண்டு, பாவமீட்சி பெறுவது அவசியாகும். ஏனெனில் அது பாரிய குற்றமாகவும், பெரும் பாவமாகவும் இருக்கின்றது. தௌபாச் செய்வதுடன், விட்ட நோன்புகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நோற்றுவிட வேண்டும். ஏனெனில் இவர் சட்டரீதியாக நோன்பு விட அனுமதிக்கப்பட்டவரல்ல. எனவே உரிய நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்நோன்புகளை உடனடி யாக நோற்க வேண்டுமென்பதே வலு வான கருத்தாகும்.

• மார்க்கம் அனுமதித்த காரணங்களான மாதவிடாய், பிரசவ இரத்தம், நோய், பிரயாணம் போன்றவற்றிற்காக நோன்பு விட்டால் அதனை சக்தி பெற்றவர் கழாச் செய்ய வேண்டும். எனினும் உடனடியாக அவசியமில்லை. அடுத்த ரமழானிற்கு முன்னர் நோற்க வேண்டும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் «ரமழா னின் சில நோன்புகள் நோற்க வேண்டியி ருக்கும், நபி (ஸல்) அவர்களுடனான வேலைப்பளுவால் ஷஃபான் மாதம்தான் அதனை கழாச் செய்யும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும்»(ஆதாரம் : முஸ்லிம் 335).

எனினும் பொறுப்புத் துறக்கும் விதமாகவும், பேணுதலுக்காக வும் அதனைத் துரிதப் படுத்துவது நன்று. சிலவேளை நோய் போன்ற தடங்கள் ஏதும் பிற்காலத்தில் நிகழலாம்.

• நோன்பு விடுவதற்கான காரணம் ஒருவரிடம் அடுத்த ரமழான் வரை தொடர்ந்து கொண்டே இருந்தால் அவ்விரண்டாவது ரமழானிற்குப் பின்னர் விட்ட நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.

• தக்க காரணமின்றி அவ்வாறு பிற்படுத்தினால் கழாச் செய்வதுடன் சேர்த்து, ஒவ்வொரு நோன்பிற்கும் பதிலாக அரை ஸாவு அளவு உணவும் அளிக்க வேண்டும் என்பதே பெரும் பான்மை அறிஞர்களின் கருத்தாகும். ஹனபி மற்றும் ழாஹிரி மத்ஹபைச் சார்ந் தவர்களிடம் கழா மாத்திரம் செய்தால் போதுமானது.

• கழாச் செய்யும் போது தொடராக நோற்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பிரித்தும், தொடராகவும் நோற்கலாம். அல்லாஹ் கூறுகின்றான் : {உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும்}
[அல்குர்ஆன் 2 : 184] இவ்வசனத்தில் தொடர்ச்சியை அல்லாஹ் நிபந்தனையிட வில்லை. அவ்வாறிருந்தால் தெளிவு படுத்தியிருப்பான்.

• ரமழான் நோன்பு கழாச் செய்ய இருந்தால் ஸுன்னத்தான நோன்புகளை விட அதனை முற்படுத்த வேண்டும். ஏனெனில் கடமையான நோன்பு முன்னி லைப்படுத்தப் பட வேண்டும். எனினும் அதற்கு மாற்றமாக நோற்றால் தவறேதுமில்லை, குறிப்பாக முஹர்ரம் 10, அரபா தினம், ஷவ்வாலின் 6 நோன்புகள் போன்ற நாள் குறிக்கப்பட்டு வந்துள்ள நோன்புகள் தவறிவிடாமல் இருக்க அவற்றை நோற்க முடியும்.

• மரணிக்கும் வரை தக்க காரணங்களுக்காக கழாச் செய்வதை விட்டுவிட்டால் அவருக்கு குற்றமேதுமில்லை, ஏனெனில் அவர் இதில் பராமுகமாக இருக்க வில்லை. காரணமின்றி விட்டால் அந் நோன்புகளுக்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நேர்ச்சை நோன்பாக இருந்தால் குடும்பத்தார் அதனை நோற்பர். பொதுவாக கடமையான நோன்பை- ரமழான் அல்லது நேர்ச்சை- விட்டுவிட்டு ஒருவர் மரணித்தால் அதனைக் குடுப்பத்தார் நோற்க வேண்டும் என்ற கருத்தையும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் பொதாக கூறினார்கள் : «தன் மீது நோன்பு கடமையான நிலையால் யார் மரணிக்கிறாரோ அவருக்குப் பதிலாக அவருடைய குடும்பத்தார் நோற்கட்டும்»(புஹாரி முஸ்லிம்).இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து «எனது தாய் தன் மீது ஒரு மாத கால நோன்பு கடமையான நிலையில் மரணித்து விட்டார், அவருக்கு பதிலாக நான் நோற்கவா?” என்று கேட்க, “ஆம், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய கடன்தான் நிறைவேற்ற மிகவும் ஏற்றது என்றார்கள்»(புஹாரி முஸ்லிம் ).