மேலதிக நோன்பு

1806

மேலதிக நோன்பு

மேலதிக நோன்பு

அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் நோற்கப்படும் கடமையல்லாத அனைத்து நோன்புகளும் மேலதிகமான (ஸுன்னத்தான) நோன்புகளாகும்

நோன்பிற்குப் பாரிய சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும்) ஹதீஸ் குத்ஸியில் கூறினார்கள்: «ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக்கப்படும், ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகப் பெருகும்”. அல்லாஹ் கூறினான் : “நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, நானே அதற்குக் கூலி வழங்குவேன்» (புஹாரி முஸ்லிம்).

நோன்பு நோற்க ஸுன்னத்தான நாட்கள்

1. ஷவ்வால் மாத 6 நோன்புகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «யார் ரமழானில் நோன்பு நோற்று அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் 6 நோன்புகள் நோற்கின்றாரோ அவர் காலம் முழுதும் நோன்பு நோற்றவர் போலாவார்»(ஆதாரம் முஸ்லிம்)இவற்றைத் தொடராகவும், விட்டு விட்டும் நோற்கலாம்.

2. துல்ஹஜ் மாத 9 நோன்புகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «இந்தப் பத்து நாட்களை விட (துல் ஹஜ் முதல் 10) நற்காரியங்கள் செய்ய அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள் இல்லை”. “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதை விடவா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபியவர்கள், “ஆம், அறப்போர் புரிவதை விட (இந்நாட்களில் நற்காரியங்கள் செய்வது தான் சிறந்தது), ஒரு மனிதரைத் தவிர, தனது உடல், பொருள் அனைத்துடனும் சென்று, பின் எதனையும் கொண்டு திரும்பாத (உயிர்த்தியாகம் செய்த)வரைத் தவிர என்றார்கள்»(ஆதாரம் புஹாரி), அத்தினங்களில் அல்லாஹ்வை நினைவு கூர்தல், “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா, அல்குர்ஆன் ஓதல், தர்மம், 10ம் நாளைத் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்றல் போன்ற வணக்கங்களைச் செய்வதில் முனைப் புடன் செயற்படுவது விரும்பத்தக்கது.

துல்ஹஜ் 9ம் நாளாகிய அரபா தினத்தில் ஹாஜிகள் அல்லாதோர் நோன்பு நோற்பது இன்னும் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «அரபா தின நோன்பு, அல்லாஹ் அதன் மூலம் அதற்கு முன்னுள்ள, பின்னுள்ள இரு வருடங்களின் பாவங்களுக்கான பரிகாரமாக ஆக்குவானென நான் எதிர்பார்க் கின்றேன்»
(ஆதாரம் முஸ்லிம்)

3. ஆஷூரா நோன்பு

ஆஷூரா

அது முஹர்ரம் மாதத்தின் 10ம் நாள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «ஆஷூரா தின நோன்பு, அல்லாஹ் அதன் மூலம் அதற்கு முன்னுள்ள வருடத்தின் பாவங்களுக்கான பரிகாரமாக ஆக்குவா னென நான் எதிர்பார்க்கின்றேன்»(ஆதாரம் முஸ்லிம்).

இந்நோன்பின் பின்னனி பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியில் பதிவாகியுள்ளது: «நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை அவதானித்து, “இது என்ன?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், “இது நல்லதொரு தினம், இந்நாளில்தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களைத் தமது எதிரிகளிடமிருந்து காத்தான், எனவே நபி மூஸா அத்தினத்தில் நோன்பு நோற்றார்கள்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களை விட மூஸாவைப் பின்பற்ற நான்தான் தகுதியா னவன்” என்று கூறித் தானும் நோன்பு நோற்று, பிறரையும் நோற்குமாறு ஏவினார்கள்.» (ஆதாரம் புஹாரிஅத்துடன் யூதர்களுக்கு மாறும் செய்வதற்காக 9ம் நாளையும் சேர்த்து நோற்பது விரும்பத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: «அடுத்த வருடமும் நான் இருந்தால் 9ம் நாளையும் நோற்பேன்»
(ஆதாரம் முஸ்லிம்)

4. சந்திர மாத நடுப்பகுதி (13, 14, 15ம் தின) நோன்பு

அய்யாமுல் பீழ்

அது சந்திர மாத நடுப்பகுதி 13, 14, 15ம் தினங்களாகும். பூரண சந்திரனின் பிரகாசத்தால் அவ்விரவுகள் ஒளிவுடன் இருப்பதனாலேயே அய்யாமுல் பீழ் எனப்படுகின்றன.

கதாதா இப்னு மில்ஹான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: «நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அய்யாமுல் பீழ் நாட்களில் நோன்பு நோற்குமாறு ஏவுவார்கள், “அவை காலம் முழுதும் நோற்கும் நோன்பிற்கு ஈடானதெனவும்” கூறுவார்கள்»
(ஆதாரம் இப்னு ஹிப்பான்).

5. வாராந்தம் திங்கள், வியாழனில் நோன்பு நோற்றல்

நபி (ஸல்) கூறினார்கள்: «திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின் றன. நான் நோன்பு நோற்ற நிலையில் என்னுடைய செயல்கள் சமர்ப்பிக்கப்படு வதை விரும்புகின்றேன்»(ஆதாரம் திர்மிதி ).

6. ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல்

ஸுன்னத்தான நோன்புகளில் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையாகும். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «அல்லாஹ்விடம் விருப்பத்திற்குரிய நோன்பு தாவூத் (அலை) அவர்களுடைய நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்»
(ஆதாரம் நஸாயி).

7. முஹர்ரம் மாத நோன்பு

«கடமையான நோன்புக்கு அடுத்து சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். »
(ஆதாரம் முஸ்லிம்).

8. ஷஃபான் மாத நோன்பு

நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களை விட ஷஃபானில் அதிகமாக ஸுன்னத்தான நோன்பு நோற்பார்கள். உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் தாங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நோற்பதைக் காணோம்?” என்று கேட்டேன். “அது ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களிடையில் மக்கள் பராமுகமாக இருக்கும் மாதமாகும், அம்மாதத்தில் செயல்கள் அகிலத்தாரின் இரட்சகனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்ற நிலையில் என்னுடைய செயல்கள் சமர்ப்பிக்கப் படுவதை விரும்புகின்றேன்” என்று கூறினார்கள். (ஆதாரம் நஸாயி)

“ஷஃபான் நடுப்பகுதியை அடைந்தால் ரமழான் வரை நோன்பு நோற்காதீர்»(அதாரம் இப்னு ஹூஸைமா).

என்ற நபி மொழியில் வந்திருக்கும் தடை ஒன்றோ ஷஃபானின் இறுதிப்பாதியில் மாத்திரம் நோற்பது, அல்லது ரமழானுடன் சேர்த்து நோற்பதைக் குறிக்கின்றது. ஷஃபான் ஆரம்பத்திலிருந்தே நோற்றால், அதனை ரமழானுடன் சேர்க்காத பட்சத்தில் நோன்பு நோற்கத் தடையில்லை.

நோன்பு நோற்கத் தடைவிதிக்கப்பட்ட, மற்றும் வெறுக்கப் பட்ட நாட்கள்

1. நோன்பு நோற்கத் தடைவிதிக்கப்பட்ட, நாட்கள்

1. இரு பெருநாள் தினங்களிலும் (ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா) நோன்பு நோற்பது ஹராமாகும். அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் இரு தினங்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள் ஈதுல் அழ்ஹா, ஈதுல் பித்ர் ஆகிய தினங்களாகும். (ஆதாரம் முஸ்லிம்)

2. ஈதுல் அழ்ஹா பெருநாள்த் தினத்திற்கு அடுத்து வரும் மூன்று நாட்களான “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களிலும் நோன்பு நோற்பது ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் உண்ணல், பருகலுக்கான நாட்களாகும்» (ஆதாரம் முஸ்லிம்). எனினும் ஹஜ் செய்யச் சென்று அங்கு “தமத்துஃ” அல்லது “கிரான்” முறையில் ஹஜ் செய்து, பிராணி அறுத்துப் பலியிட வசதியில்லாவிடில் அவர்கள் இம்மூன்று நாட்களில் நோற்கலாம். அல்லாஹ் கூறுகின்றான் : {நீங்கள் பாதுகாப்பாக (மக்காவை) அடைந்து உம்ராவை முடித்து விட்டு ஹஜ் வரை (தடுக்கபட்டவைகளில் “தமத்துஃ” முறையில்) சுகத்தை அனுபவித்தால் பலிப்பிராணியிலிருந்து சாத்தியாமானது பரிகாரமாகும். (உங்களில் எவர்) அதைப் பெற்றுக் கொள்ள வில்லையோ அவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (ஊர்) திரும்பியதும் ஏழு (நாட்களு)மாக நோன்பு நோற்கட்டும்}
[அல்குர்ஆன் 2 : 196]

3. சந்தேகற்குரிய நாளில் நோன்பு நோற்பதும் ஹராமாகும். ஷஃபான் மாதம் 30ம் நாளிரவு பிறை தென்படாமல் மேகமூட்டமாக இருந்தால் சில வேளை இது ரமழானின் முதல் நாளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நேன்பு நோற்பதே இதன் அர்த்தமாகும். அம்மார் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «யார் சந்தேகற்குரிய நாளில் நோன்பு நோற்கின்றாரோ அவர் அபுல் காஸிம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்»
(ஆதாரம் திர்மிதி (அது ஹஸன் தரமாகும்))

2. நோன்பு நோற்க வெறுக்கப்பட்ட நாட்கள்

1. ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பாக நோன்பு நோற்பது வெறுக்கத்தக்கதாகும். ரஜப் மாதத்தை மாத்திரம் கண்ணியப் படுத்துவது அறியாமைக் கால அடையா ளங்களில் உள்ளது. அம்மாதத்தில் மாத்திரம் குறிப்பிட்டு நோற்பது அவர்க ளுடைய அடையாளத்தை உயிர்ப்பிப்பது போன்றாகும்.

2. வெள்ளிக்கிழமையில் மாத்திரம் குறிப்பிட்டு நோன்பு நோற்பதும் வெறுக்கத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நீங்கள் வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்க வேண்டாம். அது அந்நாளுக்கு முன் அல்லது பின் ஒரு தினம் சேர்த்து நோற்றாலே தவிர» (ஆதாரம் முஸ்லிம்). அல்லது வழமையான நோன்பு தினங்களில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றாலும் வெறுக்கத்தக்கதாக மாட் டாது.

3. நோன்பில் “விஸால்” செய்வது வெறுக்கத் தக்கதாகும். விஸால் என்பது இரு நாட்கள் தொடராக (இடையில் நோன்பு திறக்காமல்) நோன்பு நோற்பதாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் விஸால் செய்வதைத் தடுத்தார்கள். அப்போது சிலர் நீங்கள் விஸால் செய்கின்றாரே? என்று கேட்டனர். நபியவர்கள் “நான் உங்களைப் போன்றல்ல, எனக்கு உணவளிக்கப்படுகின்றது, நீர் புகட்டப் படுகின்றது” என்றார்கள்» (புஹாரி முஸ்லிம்). அல்லது வழமையான நோன்பு தினங்களில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றாலும் வெறுக்கத்தக்கதாக மாட் டாது.

சில வழிகாட்டல்கள்

1. வணக்க வழிபாடுகளில் மார்க்க விதிகளைப் பேணுவது முஸ்லிமுக்கு அவசியமாகும். மார்க்கம் தடுத்த முறையில் நோன்பு நோற்பதோ, நபி (ஸல்) அவர்கள் குறிப்பாக்காத நாட்களைக் குறித்து புதிய நோன்புகளை உருவாக்குவதோ கூடாது. உதாரணமாக ரஜப் மாதம் 27ம் நாள் (மிஃராஜ்) நோன்பு, ஷபான் மாதம் 15ம் நாள் போன்றன புதிதாக உருவாக்கப்பட்ட நோன்புகளே. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : «எமது இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்கின்றாரே அது தட்டப்பட்டு விடும்» (ஆதாரம் முஸ்லிம்)

2. காபிர்களின் அடையாளச் சின்னங் களைக் கௌரவப் படுத்துவதை விட்டும் முஸ்லிம் தூரமாயிருக்க வேண்டும். அவர்களுடைய பண்டிகை நாட்களுக் கென்று நாம் நோன்பு போன்ற பிரத்தியே கமாக வணக்கம் ஏதும் செய்யக் கூடாது.

மருத்துவ ரீதியில் நோன்பு

தோல் நோய்களுக்கான நிவாரணியில் நோன்பு பங்கு வகிக்கின்றது. காரணம், நோன்பு குருதியில் தண்ணீரின் வீதத்தைக் குறைக்கின்றது. அதன் விளைவாக தோளிலும் அதன் வீதம் குறைந்து, தோளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பக்ட்ரீரியா மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கவும் செய்கின்றது