தொழுகையின் ஒழுங்குகள்

2137

தொழுகையின் ஒழுங்குகள்

தொழுகை மகத்தான இபாதத் ஆகும். அதன் போது ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தையும், உடலையும் அல்லாஹ்வை நோக்கியதாக இருக்க வேண்டும். உள்ளத்தாலும், உடலாலும் அதற்காக தயாராகுவது அவசியமாகும். அதனை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அவற்றுள் பின்வரும் அம்சங்கள் மார்க்கமாக்கப்பட்டுள்ளன.

1-உளத்தூய்மை

அல்லாஹ் கூறுகிறான் {அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்}(பய்யினா – 05)

அல்லாஹ்வுக்காக செய்கின்றோம் என்ற எண்ணம் இல்லாது போனால் அந்த அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். அதே போல முகஸ்துதிக்கும், மற்றவர்களின் நன் மதிப்பை பெற வேண்டும் என்று செய்தாலும் ஏற்க மாட்டான். அவ்வாறே ஷிர்க் உடைய எந்த வகைக்குள் உள்ளடங்கினாலும் அல்லாஹ் அதனை ஏற்கமாட்டான்.

2-வுழுவை ஒழுங்காக செய்தல்

இது வுழுவை பரிபூரணமாக செய்வதை குறிக்கின்றது. அபூஹூறைறா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் « (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், (குளிர் போன்ற கஷ்டமான நிலையிலும் நேர்த்தியாக செய்வதை குறிக்கின்றது.) பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் (அல்லாஹ்வை வணங்கும் விடயத்தில் கட்டுப்பாட்டோடு நடத்தல்.) என்று கூறினார்கள்»
(ஆதாரம் முஸ்லிம்)

3-தொழுகைக்கு நேரகாலத்தோடு செல்லுதல்.

இது தொழுகையை எதிர்பார்த்தவர்களாக பள்ளிக்கு நேரகாலத்தோடு செல்வதை குறிக்கின்றது. அபூஹூறைறா ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.» (ஆதாரம் புஹாரி).

4-அல்லாஹ்வை நினைவு கூர்தல்.

-வீட்டை விட்டு வெளியேறும் போது அல்லாஹ்வை நினைவு கூர்தல்.அப்போது பின்வருமாறு கூற வேண்டும். «பிஸ்மில்லா, தவகல்து அலல்லாஹ், வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.” (ஆதாரம் அபூதாவுத்) ” அல்லாஹூம்ம இன்னி அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹில அலய்ய»
(ஆதாரம் அபூதாவுத்) -பள்ளியினுள் நுழையும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும். «அல்லாஹூம்ம மஜ்அல் பி கல்பி நூறா, வபி லிஸானி நூறா, வஜ்அல் பி ஸம்இ நூறா, வஜ்அல் பி பஸரி நூறா, வஜ்அல் பி கல்பி நூறா, வமின் அமாமி நூறா, வஜ்அல் மின் பவ்கி நூறா, வமின் தஹ்தி நூறா, அல்லாஹூம்ம அஃதினி நூறா » (ஆதாரம் முஸ்லிம்).

5-கண்ணியமாகவும் அமைதியாகவும் பள்ளிக்கு நடந்து செல்லுதல்

நபியவர்கள் கூறினார்கள் «நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான (நடக்கும் போது அமைதியை பேணுதல்) முறையிலும் கண்ணியமாகவும் (கண்ணியமாக, பார்வையை தாழ்த்துதல்) செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்».(புஹாரி முஸ்லிம்)

6-பள்ளியில் நுழையும் போது பிரார்த்தனை செய்தல்

பள்ளியில் நுழையும் போது வலக்காலை முற்படுத்த வேண்டும். பின்னர் «அஊது பில்லாஹில் அழீம், வபிவஜ்ஹில் கரீம், வசுல்தானிஹில் கதீம் மினஸ் ஷைதானிர் ரஜீம்” (ஆதாரம் அபூதாவுத்) ”பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்” (ஆதாரம் முஸ்லிம்) ” அல்லாஹூம்ம அப்தஹ்லி அபுவாப ரஹ்மதிக» (ஆதாரம் முஸ்லிம்) என கூற வேண்டும்.

-பள்ளியை விட்டு வெளியேறும் போது இடக்காலை முற்படுத்த வேண்டும். பின்னர்

«பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹூம்ம இன்னி அஸ்அலுக மின் பழ்லிக, அல்லாஹூம்ம அஃஸிம்னி மினஸ் ஷைதானிர் ரஜீம்» (ஆதாரம் இப்னு மாஜா).

7-இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்

நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்.» (புஹாரி முஸ்லிம்).

8-விரல்களை கோர்வை செய்வது கூடாது.

நபியவர்கள் கூறினார்கள் «உங்களில் ஒருவர் நல்ல முறையில் வுழுச் செய்து கொண்டு பள்ளிக்குச் சொல்கிறார். அவர் தொழும் போது தமது விரல்களை தொழுகையில் கோர்வை செய்ய வேண்டாம்»
(ஆதாரம் அபூதாவுத்).

9-பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்.

தொழுகையை எதிர்பார்த்தவனாக குர்ஆன் ஓதுதல், துஆ கேட்டல் போன்றவைகளில் ஈடுபடுதல். உள்ளடத்தில் ஊசலாட்டம் ஏற்படாத வண்ணம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்..

10-பயபக்தியோடு தொழுதல்.

அதுவே உயிலோட்டமுள்ள தொழுகையின் வெளிப்பாடாகும். அச்சமில்லாத தொழுகை உயிரில்லாத உடலைப் போன்றது. இப்னு ரஜப் ரஹ் அவர்கள் அறிவிக்கின்றார்கள் ”பயபக்கியுடைய அடிப்படை – அது உள்ளத்தை மிருதுவாக்கி இலகு படித்தி அமைதியை ஏற்படுத்துகின்றது. உள்ளம் அச்சமடைந்தால் உடலுறுப்பு அதற்கு அதற்கு அடிபணிந்து கட்டுப்படுகின்றது.
(நூல் பயபக்தி – இப்னு ரஜப்)

பயபக்தியுடைய இடம் உள்ளமாகும்.

11-தொழுகையில் நபியவர்களது சுன்னாவை கடைப்பிடித்தல்.

தொழுகை ஓர் இபாதத் ஆகும். நபியவர்களது வழிகாட்டல் அதற்கு அவசியமாகும். அது தவிர்த்து ஒன்றை கூறுவதோ? அல்லது செய்வதோ? கூடாது. நபியவர்கள் கூறினார்கள் «என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்» (ஆதாரம் புஹாரி).